டில்லி,

முஸ்லிம், கிறிஸ்துவர் போன்று இந்துக்களையும் சிறுபான்மையினராக அறிவிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 80சதவிகிதம் பேர் இந்துக்களாக உள்ளனர். மற்ற மதத்தினர் குறைந்த அளவே இருப்பதால் அவர்கள் சிறுபான்மையினராக கருதப்பட்டு அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  பா.ஜ., வைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா என்பவர் குறிப்பிட்ட  7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களையும்  சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டம் என்று உச்சநீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார்,

அதில்,  கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு – காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர்.பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.

நமது நாட்டில், இதுவரை இந்துக்களை சிறுபான்மையினராக பதிவு செய்யவில்லை. எனவே, இந்த ஏழு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான், அவர்களால், சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெற முடியும் என்றும், இதுகுறித்து   1993ம் ஆண்டு  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில், மத்திய சட்ட அமைச்சகத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.