சென்னை: கொரோனா தொற்று காரணமாக, தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை 4 நாட்கள் மட்டுமே நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டப்பேரவை பட்ஜெட் மானிய கோரிக்கை கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் 31-ஆம் தேதி சபை நடவடிக்கைகள் முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், அரசியல் சாசனம் மற்றும் . பேரவை விதிகளின்படி, அடுத்த 6 மாதத்திற்குள் சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி செப்டம்பர் 24ந்தேதிக்குள் சபை மீண்டும் கூட்டப்பட வேண்டும்.
ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இதுவரை கூட்டப்படாமல் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது இருப்பதால், கூட்டத்தை, வேறு இடத்தில் நடத்தலாமா என்பது குறித்து சட்டமன்ற சபாநாயகர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். சமீபத்தில், கலைவாணர் அரங்கத்தை பார்வையிட்டு, அங்கு சபையை நடத்த முடியுமா என ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் சட்டமன்ற கூட்டம் விரைவில் கூட்டப்பட இருப்பதாகவும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த கூட்டத்தொடர் வெறும் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும், முன்னதாக சபைக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல கூட்டத்தொடர் எங்கு நடைபெறப்போகிறது என்பதும் மர்மமாகவே உள்ளது.