டிசம்பர் 26: 'சுனாமி' 12வது நினைவு தினம் இன்று!

Must read


கிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 12வது சுனாமி நினைவு தினம் இன்று.
காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று சுவடாக மாறிய நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்  ஆழிப்பேரலைக்கு  2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியாகக் காரணமாகிய சுனாமி பேரலை உருவாகிய நினைவு தினம் இன்று.
சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். “துறைமுக அலை’ எனப்பொருள். “ஆழிப்பேரலை’ எனவும் அழைக்கப்படுகிறது.
சற்று திரும்பி பார்த்தோமானால், 12 ஆண்டுகளுக்கு முன்பு,  2004 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மக்கள் சந்தோசமாக இருந்த நிலையில், அடுத்த நாளான  டிசம்பர்  26ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.
இதையடுத்து எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம் என்ற சோகமான சாதனையை பெற்றது.
உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு முன் “சுனாமி’ என்ற வார்த்தையை இந்தியாவில் யாரும் கேள்விப்பட்டதே இல்லை.
“கடல் அலை’ கோபம் கொண்டு ஊருக்குள் வந்த போது தான் தெரிந்தது. இதுதான் சுனாமி என்று. இதன் கோபமோ வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம் மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப்போவதில்லை.
ராட்சத அலைகளால், கடற்கரையில் நின்றவர்கள், கடலோர கிராமங்களில் வசித்தவர்கள் என வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஆயிரம் பேர் மாண்டனர். குவியல் குவியலாக கிடந்த பிணங்கள் ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.
அன்று கேட்ட மரண ஓலம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் கடற்கரையோர கிராமங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.
சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘நவம்பர் 5  உலக சுனாமி விழிப்புணர்வு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article