திராவிடர் கழக நிறுவனர்  தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

இன்றைய நாளில் அவரது சிந்தனைகள் சிலதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பத்திரிகைடாட்காம் இணைய இதழ் பெருமை கொள்கிறது.

நாத்திகம் பேசிய பெரியார் 

தந்தை பெரியார் பேசிய நாத்திகம்கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அவரது கருத்துக்கள்  சமுதாய உணர்வோடு பேசப்பட்டது என்பதை அறிஞர்கள் அறிவர்.

1928ம் ஆண்டு நடைபெற்ற  சமுதாய சீர்திருத்த மாநாட்டில் கலந்துகொண்ட பேசிய பெரியார், “மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் போகக் கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது போன்ற கொள்கைகள் தாண்டவம் ஆடும் ஒரு நாட்டில் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் அழிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகள் துகள்களாக வெடிக்காததைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரன் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று சொல்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கடுமையாக பேசினார்.

அதுபோலவே 1946ம்  பி.அன்.சி. மில் தொழிலாளர்கள் மத்தியிலே பேசும்போதும்,  “எந்த ஒரு மதம் ஒரு மனிதனை சூத்திரனாகவும், அதாவது தொழிலாளி யாகவும், பாட்டாளியாகவும், பறையனாக வும் உண்டு பண்ணிற்றோ அந்த மதம் ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.

எந்த கடவுள் ஒருவனுக்கு நிறைய பொருள் கொடுக்கும், ஒருவனுக்கு பாடு படாமல் வாழ உரிமை கொடுக்கும், மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்கு போட்டுவிட்டு சோற்றுக்கு திண்டாடும்படியும், இரத்தத்தை வியர்வையாக சிந்தி ஓயாது உழைத்த வண்ணம் கீழ்மகனாய் வாழும்படி செய்கிறதோ அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்.

“ஆகவே தோழர்களே இதைச் சொன்னால் நான் நாத்திகனும், மத துவேசியுமா? ஆம் ஒழிய வேண்டும் என்று சொன்ன நீங்கள் மத துவேசியா? நாத்திகர்களா?” என்று கேட்கிறார்.

பெரியார் தத்துவங்கள்:

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்

விதியை நம்பி மதியை இழக்காதே.

மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.

மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

பெரியாரின் அன்றைய சிந்தனைகள் இன்றைய பொதுவாழ்விற்கு ஒத்துப்போவதும் காலத்தின் கட்டாயம்…