மணப்பாறை,

திருச்சி அருகே உள்ள மணப்பாறை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின.

விபத்து நடைபெற்ற பகுதி அருகே வீடுகள் மற்றும் கடைகள் இருந்தால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மணப்பாறை கோவில்பட்டி சாலயில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இவர் தீபாவளியின் போது பட்டாசு கடை நடத்தினார். அப்போது விற்றுபோக  மீதமுள்ள பட்டாசுகளை கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கடையின் மாடியில் இருந்த பட்டாசு திடீரென  வெடித்து சிதற ஆரம்பித்தன. இதன் காரணமாக தீ மளமளவென பரவியது. கீழே உள்ள கடைக்கும் தீ பரவியது. பட்டாசு வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

பட்டாசு, ராக்வெட் வெடிகள், அணுகுண்டு போன்ற பட்டாசுகள்  வெடித்து சிதறுவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டனர்.

20 தீயணைப்பு வீரர்கள் போராடி சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

மணப்பாறை போலீசார் கடைக்காரரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பட்டாசு வெடித்ததன் காரணமாக எழும்பிய கரும்புகையால் அப்பகுதி பொது மக்கள் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்தை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், மணப்பாறை நகராட்சி ஆணையாளர் , போலீஸ் இன்ஸ்பெக்டர்  மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.