சென்னை: 2021-ல் தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்பட்டதுபோல் 2024ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார்.
முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண விழா சென்னை கொரட்டூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பரிதி இளம் வழுதி என் உயிர் நண்பர், என் மீது அதிக பாசம் கொண்டவர் 1980 ஆம் ஆண்டு பரிதி இளம் வழுதியை முதன் முதலில் சிறையில் சந்தித்தேன். திமுக துணை அமைப்பாக இளைஞரணியை உருவாக்கினார் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. இளைஞரணிக்கு தலைவராக தம்மை நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் அனைவரும் பேசினார்கள். திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமனமாகி படிப்படியாக உயர் பதவிக்கு வந்தேன்.
ஈரோடு இடைத்தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் ஈரோடு இடைத்தேர்தல் வேலைகளுக்கு நடுவே ஒருநாள் விடுமுறை கேட்டு, அனுமதி பெற்று இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு உடனே ஈரோட்டுக்கு புறப்பட்டு செல்வார்கள், அவர்கள் புறப்படுகிறார்களா என்று கண்காணிக்கும் நிலையில் நான் இருக்கிறேன்.
கலைஞர் கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது. குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளாக வித்திட்டது கலைஞரின் பேனா என முதலமைச்சர் பேசினார்.
ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே; ரூ.15-ஆவது போட்டீர்களா?. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய முதல்வர், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. எந்த கேள்விக்கும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என்றவர், 2021-ல் தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்பட்டதுபோல் 2024ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் என பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.