தமிழக அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் அனைத்து ஒப்பந்ததாரர்களின் விவரம் அடங்கிய தரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கோரியுள்ளார்.
ஒருங்கிணைந்த இந்த தரவு தளத்தின் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் இதனால் அனைத்து துறைகளும் இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறைக்கும் முயற்சியில், ஒப்பந்ததாரர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது உட்பட பல்வேறு புதிய முயற்சிகளை மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) அல்லது ஆதார் தரவுதளத்தைப் போன்று ஒப்பந்ததாரர்களின் விவரமடங்கிய தனித்துவமான தரவுதளத்தை உருவாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பரிந்துரைத்துள்ளார்.
மாநிலத்தின் ரூ. 1.19 லட்சம் கோடி மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்த நிதியமைச்சர், ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதத்தைத் தவிர வேறு எந்த விவரமும் இல்லை என்றும் அதிலும் பெரும்பாலான வங்கி உத்தரவாதங்கள் தெளிவில்லாமல் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
ஒப்பந்ததாரர்களின் தரவரிசை முறையைப் புரிந்துகொள்வதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசு ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது. மேலும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய விதிமுறைகள் போன்ற வழிமுறைகளை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அனைத்து திட்டங்களின் மைய தரவுத்தளத்தையும், திட்டங்களை கையாளும் ஒப்பந்ததாரர்களின் பட்டியலையும் கோரியுள்ளார், இதனால் அனைத்து துறைகளும் தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும். இந்த தரவுதளத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையைக் கொண்டு வடிவமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்த போர்ட்டலில் ஒருங்கிணைத்து அவற்றை மறுபரிசீலனை செய்யவும் அரசு ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய ஒப்பந்ததாரர்களின் தகவல்களின் தரவுத்தளமும் மேம்படுத்தப்பட்டு, சிறந்த புரிதல், ஒருங்கிணைப்பு, பொது செயல்திறன் மற்றும் கருத்து மற்றும் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீட்டிற்காக பட்டியலிடப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.