ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறது. ஜனவரி 9-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக, ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது.

இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

லைகா நிறுவனம் தங்களது ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்த உடன், மலேசிய நிறுவனம் வெளியீட்டுக்குத் தடை கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே “தர்பார்” படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது படத்திற்காக மிக பிரமாண்டமான ப்ரோமோஷன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கபாலி படத்தை போன்று விமானத்தில் தர்பார் படத்தின் போஸ்ட்டரை ஒட்டி ப்ரோமோஷன் செய்துள்ளனர் படக்குழுவினர்.