ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று வெளியான தர்பார் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால், நீக்கப்படுகிறது. தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல. பொதுவாக எழுதப்பட்ட வசனம் தான் அது எனவும் லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசனிடம், தர்பார் வசனம் விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ”’பராசக்தி’ காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, ’தர்பார்’ படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான்.” என்று தெரிவித்துள்ளார்.