ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பத்து பேருக்கும் மேல் பலியானது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை:

“தூத்துக்குடியில்   நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி, ஒரு கல்லூரி மாணவர் உட்பட 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதை, சுதந்திர இந்தியாவில் சுயமரியாதைக்காக அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்த தேவேந்திரகுல மக்களும் புதிய தமிழகம் கட்சியும் நன்கு அறிவோம்.

1999-ஆம் ஆண்டு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒரு வயதே நிரம்பிய விக்னேஷ் உட்பட 17 பேரை இழந்து வேதனைக்கு ஆளானவர்கள் நாங்கள். 1957-ல் தியாகி இம்மானுவேலை இழந்தோம். 1968-ல் கீழவெண்மணியில் 44 பேரை தீயிட்டுக் கொளுத்தினார்கள். 1979-ல் உஞ்சனையில் 7 பேரை பலிவாங்கிக் கொண்டார்கள். ஆண்டு தவறினாலும், போராட்டங்களும் இழப்புகளும் தவறாது என்பதைப் போல, 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ல் சென்னை மெரினாவில் சிவஞானம், சுப்பிரமணியம், 1997-ல் துறையூரில் பிலிப், சண்முகம், 2008-ல் கோட்டைப்பட்டியில் சுரேஷ், 2011-ல் பரமக்குடியிலே 7 பேர் மற்றும் பிண்டாரிக் கும்பலின் தாக்குதலுக்கு திருவைகுண்டம் பாஸ்கர் உட்பட உயிர்நீத்தோர் எண்ணற்றோர்.

கீழவெண்மணி திமுக, உஞ்சனை அதிமுக, போடி மீனாட்சிபுரம் திமுக, புளியங்குடி அதிமுக, துறையூர் திமுக, கொடியங்குளம் அதிமுக, தாமிரபரணி திமுக, பரமக்குடி அதிமுக என மாறி மாறி திமுக, அதிமுக ஆட்சிகளில் துப்பாக்கிச் சூட்டிலும், இருவருக்குள்ளும் பெரும் போட்டியே நிறைந்திருக்கிறது. எனவே, நேற்று நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்ணீர் வடிக்க திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை.

தாமிரபரணியில் 17 பேர் உயிரிழந்த பொழுது மனிதநேயத்தின் அடிப்படையில் கூட ஒரு வருத்தம் தெரிவிக்காதவர்கள் தான் அன்று ஆட்சியிலிருந்த கழகக் குடும்பம். 2008-ஆம் ஆண்டில் ஒரு குக்கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி கோட்டைப்பட்டி சுரேஷ் எனும் இளைஞரின் உயிரைப் பறித்தவர்களும் அவர்களே. 2011-ஆம் ஆண்டு பரமக்குடியில் 7 பேர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானபோது சட்டமன்றத்தில் ”செயல்” புயலாக கொந்தளிக்கவில்லை, முயலாகப் படுத்திருந்தது. அவர் தற்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்காக பெங்களூர் விஜயத்தையும் தியாகம் செய்துவிட்டு தூத்துக்குடி நோக்கிப் புறப்பட்டிருக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலையைத் துவங்க முதல் அனுமதி கொடுத்தவர்களே இவர்கள் தான். 1996 முதல் 2001 வரையிலும் அந்த ஆலை சிறப்பாக செயல்பட ஆக்கமும் ஊக்கமும் அளித்ததும் கழகக் குடும்பமே. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசியல் பலம் முதல் அடியாள் பலம் வரை சேர்த்துக் கொடுத்ததே, தூத்துக்குடி மாவட்ட முரட்டுப் பக்தர் குடும்பம் தான். ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியினுடைய காற்று, நீர், நிலம், நிலத்தடி நீர் அனைத்துமே மாசுபட்டன. 1999-ல் அதை எதிர்த்து நாம் போராடிய பொழுதே, குறுக்குச்சால் ஓட்டி கைக்கோக்கள் கெடுத்தார்கள். 2011-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவிய பொழுது, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, கருங்குளம், விளாத்திக்குளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பாலைவனச் சோலையாக ஒருசில கிராமங்களில் கிடைத்த நன்னீரையும் பல நூறு அடிகள் ஆள்குழாய்க் கிணறுகள் அமைத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தினமும் 2000 முதல் 3000 லோடு லாரி நீர் உறிஞ்சப்பட்டது. சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பெரிய ஆலைகளுக்கு நிலத்தடி நீரை அனுமதிக்கக் கூடாது என வட்டாட்சியர்கள் போட்ட உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட அனைத்து லாரி உரிமையாளர்களையும் நமக்கு எதிராக, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் திரட்டி போராட்டம் நடத்தியவர்களே தூத்துக்குடி மாவட்ட திமுக பெரிய குடும்பம் தான்.

இன்று வரையிலும், ஸ்டெர்லைட்டின் வாகன காண்ட்ராக்ட், சிமெண்ட் ஆலை பயன்பாட்டிற்கு தினமும் 10 லோடு கரித் துகள்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு விதமான அனுகூலங்களைப் பெற்று பங்குதாரர்களாக அவர்கள் உள்ளார்கள் என்பதும் ”செயலுக்குத்” தெரிந்திருந்தும், தெரியாதவர் போல் நடிக்கிறார்.

இந்த ஸ்டெர்லைட் போராட்டம் துவங்கிய போது, எதிர்ப்பாளர்களின் போராட்டமெல்லாம் அந்த ஜீவனுக்கு எதிராகவே இருந்தது என்பதை மறைத்திட முயல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்களை 3 மாத காலத்திற்கு மேலாக இந்த போராட்டத்திற்குத் தள்ளியது மாவட்டக் குடும்பமும், மாநிலக் குடும்பமும் சேர்ந்தே. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் அந்தக் குடும்பம் குறியாக இருந்தது. அந்தக் குடும்பமே, நேற்று நடந்த அனைத்துச் சம்பவங்களுக்கும் மூலக் காரணமாகும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க சரியான முகாந்திரத்தை காவல்துறைக்கு அமைத்துத் தர வேண்டும்; சரியாகவே செய்து முடித்தார்கள்; ஆலை ஏற்கெனவே மூடிக்கிடக்கிறது. அதை திறப்பதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்க அவசியம் ஏன் வந்தது? அப்போராட்டத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கைப்பற்ற திசைமாற்றியது ஏன்?

துவக்கம் முதல் அரசியல் கட்சிகள் எதுவும் ஆதரவு என்ற நிலைப்பாட்டைத் தவிர, போராட்டத்திற்குச் செல்லவில்லை. போராட்டம் திசைமாறினால், போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு நடத்தினால், தற்காலிகமாவது ஸ்டெர்லைட்டுக்கான போராட்டம் பின்னடைவை சந்திக்கும். தங்களுடைய பங்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று அந்தக் குடும்பம் போட்டத் திட்டம் நிறைவேறிவிட்டது.

12 அப்பாவிகளின் மரணம், கழகத்திற்கு ஏற்கெனவே கை வந்த பிண அரசியலுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. கடந்த ஒரு வருடமாக சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் என்னென்னெமோ செய்தும் முதலமைச்சர் நாற்காலியைப் பிடிக்க முடியவில்லை; மாட்டுக்கொம்பைப் பிடித்தும் முடியவில்லை; மதுவைப் பிடித்தும் முடியவில்லை; குட்கா-புகையிலை பிடித்தும் முடியவில்லை; இப்பொழுது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைப் வைத்தாவது கரையேறி விடலாம் எனவும், இதை வைத்தே தோழமைக்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தோழமைக் கட்சிகளோடு, எடப்பாடி அரசுக்கு எதிராக வலம் வரவும் “செயல்” துடிக்கிறது.

உள்ளூர ஸ்டெர்லைட்டை வளர்க்க மாவட்டக் கழகக் குடும்பம் செயல்படும், மாநில கழகக் குடும்பம் அப்பாவி மக்களின் மரணத்தை அரசியலாக்கும்; இதற்குப் பெயர் தான் இரட்டை வேடம். இந்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட விடாமல் தடுப்பதற்கு, திமுக போடும் நாடகமே இது. துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் மரணமட்டுமல்ல, கடந்த 25 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுவாசக் கோளாறுகளாலும், இதர கோளாறுகளாலும், நிலத்தடி நீர் மாசுபட்டதாலும், மண்ணை இழந்ததாலும் ஏற்பட்ட அனைத்துப் பாதிப்புகளுக்கும் ”செயலும்”, ”செயலின்” குடும்பமும், மாவட்ட முரட்டு பக்தர் குடும்பமும் தான் காரணம் என்பதை நாடறியும், நாடறியச் செய்வோம்.

எங்களுக்குத் தொழிலும் வேண்டாம் தொழிற்சாலையும் வேண்டாம். நல்ல காற்றும், நல்ல நீரும் எம் மண்ணில் கிடைத்தாலே போதும் என்று உள்ளார்ந்த உணர்வுகளோடு போராடக்கூடிய இளைஞர்களும், மாணவர்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், உண்மையான களப்போராளிகள் யார்? என்பதை இந்த நேரத்திலாவது இனங்கண்டு, அந்த மக்களோடும் இயக்கத்தோடும் உறவாட வேண்டுகிறேன். தலைமையில்லாத வெகுஜனப் போராட்டமும், வெகுஜனமில்லாத வெறும் தலைமை மட்டுமே உள்ள போராட்டமும் வெற்றி பெற்றதில்லை; வெற்றி பெறாது. இதுவே உலக வரலாறு.

போராட்டங்களும் புரட்சிகளும் மாலை நேர விருந்துகளைப் போன்றது அல்ல. மலைகளையும் கடல்களையும் தலைகீழாகப் புரட்டிப்போடுவது ஆகும். காற்றும், நீரும், மண்ணும் மட்டும் மாசுபடுவதில்லை. இந்தியத் திருநாட்டில் ஆள்வோர், ஆளப்படுவோர் மனதிலும் மாசு படிந்திருக்கிறது.

குண்டாந்தடிக்கும், கண்ணீர்புகைக்கும், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் நெஞ்சை நிமிர்த்தக்கூடியவர்கள் 500 ரூபாய் தாளுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இளைஞர்கள், யுவதிகளுடைய சக்தி அளப்பரியது. ஆனால், ஒருசில விளம்பரங்களால் கிடைக்கும் போதைக்கு மாற்றத்தை விரும்புகிறவர்களே அடிமையானால் மாற்றம் எங்கே நிகழும்? சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சம வாய்ப்பையும், சம பங்கையும் நிலைநாட்ட நாம் நெடும்பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்மண்ணையும், மக்களையும் ஏமாற்றி வந்தவர்கள், சுரண்டி வந்தவர்களுக்கே மீண்டும் களம் அமைத்துக் கொடுத்துவிடாதீர்கள்.

இம்மண்ணின் ஒரு பகுதியை, ஒரு மாவட்டத்தை மட்டுமே நச்சாக்கும் தாமிர உருக்காலையை மட்டும் ஒழித்தால் போதாது. 50 ஆண்டு காலமாக தமிழகத்தை சுரண்டும், வஞ்சிக்கும் அரசியல் அரக்கர்களையும் ஒழித்திட வேண்டும். அதுவே இளைஞர்களின் முழக்கமாகட்டும்.” – இவ்வாறு தனது அறிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.