தஷ்ரத் மாஞ்சி :மலையை தனியாளாய் 22 ஆண்டுகள் வெட்டி தன் தலித் கிராமத்திற்கு சாலை அமைத்தவர்.இவர் வாழ்க்கை  ” மாஞ்சி- மவுன்டைன் மேன் ” எனும் ‘திரைப்படமாய் வெளிவந்துள்ளது.

சுயநலவாதிகள் நிரம்பிய உலகம் என நாம் குறைபட்டுக் கொண்டாலும். பிரதிபலன் எதிர்பார்க்காது  பொதுச் சேவை செய்யும் சிலரை நாம்  மனப்பிரள்வு கொண்டவர் என்று கேலிப்பேசினாலும், அவ்வப்போது சில ஆச்சர்யமூட்டும்  செயல்கள் அரங்கேறிய வண்ணமே உள்ளன.

பீகாரில் , தன் மனைவியின் நினைவாய் ஒரு மலையை 22 ஆண்டுகள்  வெட்டி தன் தலித் கிராமத்திற்கு  சாலை அமைத்த தஸ்ரத் மாஞ்சியின் வரலாற்றை திரைப்படமாய் பார்த்திருப்போம்.

அந்த அளவிற்கு நிகரான உழைப்பு இல்லை என்றாலும்  அதற்கு சற்றும் குறைவில்லாத அன்பின் வெளிப்பாடாய் மகாராஸ்த்திரா நாக்பூர் வாஷிம் மாவட்டம் கலம்பேஷ்வர் எனும் தலித்கள் வசிக்கும்  கிராமத்தை சேர்ந்த பாப்புராவ் தாஜே, தன் மனைவிக்காகவும் தன் கிராம தலித் மக்கள் துயர் போக்கவும் உறுதிப் பூண்டு ஒரு கிணறு வெட்டியுள்ளார்.

சாதாரணமாய் ஒரு கிணறு வெட்ட நான்கு அல்லது ஐந்து ஆட்கள் இணைந்து வேலை செய்வார்கள். ஆனார் இவர் தனியாளாய் ஒரு கிணறு வெட்டி தண்ணீரைக் கண்டுபிடிக்க  அந்த கிராமமே தற்பொழுது மகிழ்ச்சி வெள்ளத்தில்  மூழ்கியுள்ளது.  பாப்புராவ் தாஜே  BA இறுதியாண்டு வரைப் படித்துள்ள  , கூலித்தொழிலாளியான கிணறுவெட்டுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாதவர்.

தம்முடைய மனைவி ஒரு கிலோமீட்டர்   நடந்து தண்ணீர் எடுக்கச் சென்ற இடத்தில் உயர் சாதியினரால் அவமானப்படுத்தப்பட்டு தண்ணீர் தர மறுக்கப்பட்டதை கண்டு கண்கலங்கிய அவர், அருகில் உள்ள மேல்காவுன் நகரத்திற்கு சென்று கிணறு வெட்டும் ஆயுதங்களை வாங்கி வந்து அன்றே கிணறு வெட்ட கிளம்பினார்.  தண்ணீர் கிடைக்குமா என்று எந்த நீரியல் (Hydrology) பரிசோதனையும்  இவர் செய்ய வில்லை. கடவுளின் மீது பாரத்தைப் போட்டு, தன் மனதிற்குப் பட்ட இடத்தை தேர்வு செய்து கிணறு வெட்ட ஆரம்பித்தார்.

தான் கிணறு வெட்டப் போவதாய் கூறியபோது குடும்பத்தினர் உட்பட யாரும்  அதனை நம்பவில்லை. ஏனெனில் ஏற்கனவே அதே பகுதியில், மூன்று கிணறுகளும் ஒரு ஆழ்துளை எனும் போர்வெல்லும்  தண்ணீர் இன்றி வறண்டு போய்விட்டன. மாறாக மக்கள் அவரை லூசு எனக் கேலி செய்தனர்.

well feat 1அவர் ஏழ்மை நிலை அவர் தான் புரிந்து வந்த தினசரி வேலைக்கு விடுமுறை எடுக்க அனுமதிக்க வில்லை. எனவே தினமும் காலையில் நான்கு மணி நேரமும் மாலை வீடு திரும்பியவுடன் இரண்டு மணி நேரமும்  கிணறு தோண்டு வந்தார்.  இவ்வாறு  விடாமுயற்சியுடன் அவர் தொடர்ந்து ஆறு மணி நேரம் தோண்டினார். தண்ணீர் வரும்வரை அவர் அயரவில்லை.  நாற்பது நாட்களுக்கு பிறகு தண்ணீர் வந்தது. தம் உழைப்புக்கு பலன் கிடைத்ததில் அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது…

உயர் சாதியைச் சேர்ந்த கிணறு  உரிமையாளர் என் மனைவியை ஏளனப்படுத்தி தண்ணீர் தர மறுத்துவிட்டார். என் கிராமத்தின் அமைதி கருதி நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. இது என்னை மிகவும் பாதித்ததால் என் மனைவி மற்றும் கிராமத்தின் துயர் துடைக்க முடிவெடுத்து இந்தப் பணியை செய்தேன் ” என்றார்.

அவரது மனைவி கூறுகையில், “எங்கள் குடும்பத்தினர் அவருக்கு எந்த உதவியும் செய்யாதது மட்டுமின்றி அவரை கிண்டலும் செய்து வந்தோம்… அதற்காக தற்பொழுது வருந்துகின்றோம். தண்ணீர் கிடைத்த பிறகு என் இரு குழந்தைகள் நீங்கலாக, அனைவரும் தற்பொழுது அவருக்கு உதவி வருகின்றோம். அவருக்கு இந்த கிணற்றினை இன்னும்  ஐந்து அடி ஆழப்படுத்த வேண்டும். 6 அடி அகலத்தை 8 அடியாக அகலப்படுத்த வேண்டும் என அவர் விரும்புகின்றார்” என்றார்.

இவரது செயலை ஒரு மராத்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் , கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு பாராட்டுகள் குவிந்தவன்ணம் உள்ளன.
மேல்காவுன் தாசில்தார் இவரை நேரில் சந்தித்து பூங்கொத்து ஒன்றை அளித்து அனைத்து உதவியும் செய்வதாகக் கூறியுள்ளார். வாஷிம் நகரத்தை
சேர்ந்த ஒரு சமூகஆர்வலர், இவரைப் பாராட்டியதுடன்  ₹ 5000 ரொக்கமும் கொடுத்துள்ளார்.
நடிகர் நானா படேகர் இவருடன் அலைபேசியில் உரையாடி பாராட்டியுள்ளார். விரைவில் இவரை நேரில் சந்திப்பதாக கூறியுள்ளார்.