திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்மடியனூர் கிராமத்தில் உள்ள தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தென் முடியனூரில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்குள் அந்த பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த கோவில் தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், 80 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  தலித் மக்கள்  உள்ளே நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக,   தென் முடியனூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.   புகாரை அடுத்து திருவண்ணாமலை ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்போடு ஆலயத்தில் நுழைய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கோவிலை பூட்டு போட்டு பூட்டினர்.

இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500-க்கும் ஏற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுனர். தொ‘டர்ந்து,  ஊர் மக்களுடன் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மாவட்ட  ஆட்சியர் முருகேஷ் தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை அழைத்துச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. மேலும், கோயில்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என  தெரிவித்தார்.