சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது  இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. அது,  இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும்.

இன்று காலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மண்டலமாக வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘இதைத்தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

பிப்ரவரி 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். குறிப்பாக,  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.  மேலும் , கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர். அதன்படி இன்று காலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.