புதுடெல்லி: மார்பக தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலாய்லாமாவின் உடல்நிலை நன்றாக தேறிவருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அடைக்கலத்தில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் 83 வயதான திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமா, டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சாதாரண சளிப் பிரச்சினைதான் என்றும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

வியாழன் காலை முதலே, அவர் வழக்கமான மனிதராக மாறிவிட்டார். சில உடற்பயிற்சிகளை செய்கிறார். ஆனாலும், அவருக்கான சில மருந்துகளை எடுத்துக்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திபெத்தை ஆக்ரமித்த சீன ராணுவத்திடமிருந்து, கடந்த 1959ம் ஆண்டு ஒரு ராணுவ வீரரின் வேடம் பூண்டு, பனி படர்ந்த இமாலயத்தின் வழியாக, இந்தியாவிற்கு தனது 23வது வயதில் தப்பி வந்தார்.

அதுமுதல், நாடுகடந்த அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு, திபெத் விடுதலைக்காக போராடியவர், ஒரு கட்டத்தில் தனது கோரிக்கையை, அதிக சுயாட்சி என்ற அளவில் சுருக்கிக் கொண்டார். இவர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி