மும்பை:

ரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், அதிதீவிர புயலாக வலுவடைந்து உள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தின்  சிந்துதுர்க் மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம்  ரெட் அலர்ட் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதி உருவான புயலுக்கு  ‘கியார்’ புயல் என பெயரிடப்பட்ட நிலையில், அந்தப்புயல் தற்போது மேலும் வலுவடைந்து  அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் மேற்கு-வடமேற்கு நோக்கி மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கம் காரணமாக மகாராஷ்டிரா மாநில கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என்றும், குறிப்பாக  சிந்துதுர்க் மாவட்டத்தில் அதீத கனமழை இன்று பெய்யும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புயலின் காரணமாக அந்த மாவட்டத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் 204.5 மிமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரையில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது இந்திய வானிலை மையம். இதையடுத்து  சிந்துதுர்க் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை மாநில அரசு  முடுக்கி விட்டுள்ளது.

கியார் புயலின் தாக்கம் காரணமாக, மகாராஷ்டிரா மட்டுமின்றி,  கர்நாடகா, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் என்று  கூறியுள்ளது.

கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் , அடுத்த 5 நாட்களில் ‘கியார்’ புயல் மேற்கு-வடமேற்கு திசைகளில் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.