சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று குறைந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனத்த மழை காரணமாக, சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.  மேலும் சென்னையில் உள்ள 14  சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அவை மூடப்பட்டுஉள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியில் நிலைகொள்ளும் என்றும் நாளை ( 5ஆம் தேதி)  நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக சென்னை மற்று சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் பலத்த சூறை காற்றுடன் கன மழைபெய்து வருகிறது. இதனால், இன்று சென்னை உள்பட 4 மாவட்டடங்களுக்கு அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும்  பொதுவிடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் காரணமாக நேற்று இரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டாலும், தொடர்மழை மற்றும் காற்று காரணமாக, பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் மழை இன்றும் நீடிக்கும் என்பதால், சென்னையில் உள்ள பேருந்து மற்றும் ரயில்வே சுரங்க பாதைகள் நீரினால் சூழப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள   14 சுரங்கப்பாதைகள் மூடடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மேட்லிரோடு , ரங்கராஜபுரம், வியாசர்பாடி உட்பட சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.  சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப்பாக வடபழனி, வளசரவாக்கம், அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், அண்ணாநகர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக வாகனங்கள் செல்லமுடியாமல் தவித்து வருகின்றன. மேலும்,  தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அரசின் முகாமில்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்பட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

தற்போது மிக்ஜாம் புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மிக்ஜாம் புயல் நகர்கிறது என்றும், இன்றும், நாளையும்   ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை  பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.