சென்னை: ஃபெஞ்சால் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று முற்பகல் மேலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் இன்று மதியம் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால், நேற்று முதல் பெய்யத்தொடங்கிய மழை, நள்ளிரவு முதல் காற்றுடன் பெய்து வருகிறது. இன்று காலை முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன் கனமழையும் கொட்டி வருகிறது. மெரினா கடற்கரை சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடுகிறது.
வடசென்னையின் பெரும்பகுதிகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளதுடன், பல ரயில்வே மேம்பாலங்கள், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை முழுவதும் தொடர் மழை காரணமாக வெள்ளத்தால் சூழப்பட்டு வருகிறது. மழையை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பெய்து வரும் மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இன்று காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழையாக மட்டுமின்றி சென்னை முழுவதும் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையுடன் சூறைக்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலே இருக்கின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும் இந்த பலத்த காற்று காரணமாக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள், பேனர்கள் தூக்கி வீசப்பட்டன.
இதனிடையே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான சாலையான ராதாகிருஷ்ணன் சாலை, தண்டையார்பேட்டை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும் பலத்த காற்றினால் அசோக் பில்லர் பிரதான சாலையில் விழுந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரை சாலையில், மழைநீர் வெள்ளம்போல தேங்கி காணப்படுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், சென்னை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று முழுவதும் மழையின் தாக்கம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீர்களை உடனடியாக அகற்றும் விதமாக ராட்சத மோட்டார்கள், மரங்கள் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அதே நேரம் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகளில் பொதுமக்கள் நலன் கருதி பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழைகாரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 449 கன அடி நீர்வரத்து உள்ளது.