மும்பை

ஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.1000 க்கு மேல் எடுக்க முடியாமல் தவித்து  வருகின்றனர்.

வாராக்கடன்கள் அதிகரிப்பால் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.    குறிப்பாக வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தில் இருந்து தினமும் ரூ.1000 வரை மட்டுமே எடுக்க அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.    இதனால் பல வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.  அவர்களில் ஒரு சிலரைப் பற்றி இங்குக் காண்போம்.

பொவாய் பகுதியில் உள்ள டி கே ஹாஸ்பிடாலிடி என்னும் குழுமத்தின் மூன்று நிறுவனங்களின் கரண்ட் அக்கவுண்டுகள் இந்த வங்கியில் உள்ளன.  இந்த நிறுவனத்ஹ்டின் அதிபரான டிகே ஷெட்டி, “நாங்கள் எங்கள் செயல் முதலீட்டை இந்த வங்கிக் கணக்கின் மூலம் நிர்வகித்து வருகிறோம்.   அதிகரித்த கட்டுப்பாடுகளினால் எங்கள் நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காசோலைகள் திருப்பப்பட்டன.  எங்களுக்கு நிறைய வேலையாட்கள் அவ்வப்போது தேவைப்படும்.  இதனால் நாங்கள் 1500 ஊதிய கணக்குகளை இந்த வங்கியில் வைத்துள்ளோம்.  அந்த கணக்குகளில் எங்களால் ஊதியம் செலுத்த முடியாத நிலை உள்ள்து.  இது குறித்து நான் ரிசர்வ் வங்கி நிர்வாகியை சந்தித்தேன்.  ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்கவே இல்லை “ எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் வசிக்கும் தொலைக்காட்சி நடிகர் சந்தன் சிங், “நான் வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் இப்போது பணி இல்லாமல் இருக்கிறேன். எனது சேமிப்பு முழுவதுமாக தீர்ந்து விட்டது. இப்போது எனது சிகிச்சை எனது நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளின் நிதி உதவியால் நடைபெறுகிறது.   பி எம் சி வங்கியால்  எனது சிகிச்சைக்கு எனக்கு அவர்கள் அளித்த பணத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்

பிரகாஷ் மற்றும் அனிதா என்னும் மூத்த தம்பதியர்கள், “நவி மும்பையில் வசிக்கும் நாங்கள் சுமார் ரூ.1 கோடியை இந்த வங்கியின் வைப்பு நிதியில் வைத்துள்ளோம்.   எனது கணவர் பல வருடங்களாகப்  பொறியாளராக பணி புரிந்து ஈட்டிய  பணத்தை ஓய்வுக்குப் பிறகு இவாறு முதலீடு செய்தார்.   ஆனால் தற்போதுள்ள நிலையில் எங்கள் கடின உழைப்பால் சேர்த்த பணத்தை நாங்கள் இழந்து விடுவோமோ என்னும் பயம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறி உள்ளார்.

இவரைப் போல அந்தேரியில் வசிக்கும்  ரோனா பென் என்னும் ஓய்வு பெற்ற விமானப் பணிப்பெண் 18 வயதில் இருந்து தாம் பணி புரிந்து சேர்த்து வைத்த ரூ.1.3 கோடி ரூபாயை இந்த வங்கியில் முதலீடு செய்துள்ளார்.   தனியாக வசித்து வருவதால் இவர் அப்போதைக்கு தேவையான  பணத்தை மட்டுமே எடுப்பது வழக்கம்.   தற்போது வங்கியின் கட்டுப்பாட்டினால் கோடிக்கணக்கில்  பணம் இருந்து அன்றாடங்காய்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

நுபுர் கௌல் மற்றும் ராகேஷ் பட் தம்பதியினரும் தாங்கள் வீடு கட்ட சேர்த்த பணத்தை இந்த வங்கியில் முதலீடு செய்து விட்டு தற்போது தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆகுமோ என்னும் பயத்தில் உள்ளனர்.   சிறு தொழில் முனைவரான  கரன் நாக்பால் என்னும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனது தினசரி வர்த்தகத்துக்குத் தேவையான பணத்தை எடுக்க முடியாமல் புலம்பி வருகிறார்.

மேலே குறிப்பிட்டவர்களைப் போல் பலரும் தவித்து வருகையில் இந்த விவகாரம் குறித்து ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் கவனம் செலுத்தாமல் உள்ளதாக மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.