சென்னை:
மிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

 

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் திங்கள் கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து வல்லரசு நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத சூழலில், தமிழகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் தமிழகம் சிறந்த முறையில் பணியாற்றி வருவதாகவும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார்.