அருள்மிகு திருப்புலீஸ்வரர் இளமையாக்கினார் ஆலயம், சிதம்பரம், கடலூர் மாவட்டம்
தல வரலாறு
சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்து, பர்ணசாலை அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு “திருப்புலீஸ்வரர்’ என்றும், சிதம்பரத்திற்கு “திருப்புலீஸ்வரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது.
இளமை தரும் சிவன்
திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். இவ்வூரில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள்.
சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார். இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். “இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்!’ என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார்.
நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை. மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி “திருவோடு தொலைந்துவிட்டது!’ என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார்.
மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார். அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்
சிறப்பம்சம்
தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.
அமைவிடம்
சிதம்பரம் நடராஜர் கோயில் மேலவீதியில் இளமையாக்கினார் கோயில் தெருவில் கோயில் அமைந்துள்ளது.
திருவிழா
நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி, திருக்கார்த்திகை
தல சிறப்பு
தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.
பொது தகவல்
பிரகாரத்தில் கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சரஸ்வதி, பிரம்மா, நந்தி ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனை
பிரச்சனையால் பிரிந்துள்ள தம்பதியர், தங்களுக்குள் கருத்து ஒற்றுமை இல்லாதோரும், ஒற்றுமையாக இருக்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியவுடன் நெய் தீபமேற்றி, சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
அருகிலுள்ள ரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி, சென்னை
தங்கும் வசதி
சிதம்பரம்