சென்னை:
சென்னை – லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கிய 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுதலின் போது மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி களமிறங்கினர்.

இந்த ஜோடிக்கு சரியான தொடக்கம் கிடைக்காத நிலையில், மேயர்ஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், தொடக்க வீரர் மனன் வோரா 10 ரன்னிலும் அவருக்குப் பின் வந்த கரண் சர்மா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் க்ருனால் பாண்ட்யா டக்-அவுட் ஆகி வெளியேற, அதிரடி ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 6 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினார்.

சென்னை அணி பந்துவீச்சில் மிரட்டலை தொடரவே, லக்னோ அணி 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு, களத்தில் இருந்த நிகோலஸ் பூரன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் பூரன் 20 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சென்னை அணியின் தீபக் சாஹரின் ஓவரை வெளுத்து வாங்கிய படோனி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. அந்த தருணத்தில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து இருந்தது.

தொடர்ந்து மழை பொழிவு நீடித்ததால், லக்னோ பேட்டிங் செய்ய வாய்ப்பு குறைவு என்றும், சென்னையின் வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 127 ரன்கள் – 17 ஓவர்களில் 117 ரன்கள் – 15 ஓவர்களில் 106 ரன்கள் – 12 ஓவர்களில் 89 ரன்கள் – 10 ஓவர்களில் 76 ரன்கள் -ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. மேலும், 5 ஓவர்கள் சேஸிங்கிற்கான கட்-ஆஃப் இரவு 7.28 வரை எனவும், அதற்குள் போட்டி தொடங்கவில்லை என்றால் ஆட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக பரம போட்டியாளரான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற சனிக்கிழமை (மே 6ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும்.