திருநெல்வேலி: இறந்த தாயின் உடலை அவரது, ஏழை மகன் சைக்கிளில் கட்டி, சுமார் 15 கி.மீ தூரம்முள்ள சொந்த ஊருக்கு தள்ளிச்சென்ற சோகம் அரங்கேறி உள்ளது. இந்த கொடுமையான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இதுபோன்ற சோக சம்பவங்கள் இதுவரை வட மாநிலங்களில்தான் நடைபெற்று வந்தன. தற்போது முதன்முறையாக தமிழ்நாட்டிலும், அதுவும் நெல்லை சீமையில் அரங்கேறி இருப்பது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் பகுதியைச் சேர்ந்த, சிவகாமியம்மாள் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 11ந்தி அன்று அவரது மகன் பாலன் என்பவர், தனது சைக்கிளில், வீட்டில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் சிவகாமியம்மாள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், வீட்டுக்கு வந்த அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அருகே உள்ள நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்ச பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை உணவு அருந்திய அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை அவரது மகன் அங்கிருந்து தூக்கிச்சென்றுள்ளார்.
பின்னர் மருத்துவமனை வார்டுக்கு ஆய்வு வந்த மருத்துவரும், செவிலியரும் அந்த நபர் குறித்து கேள்வி எழுப்பிய பிறகே, அவர்கள் எங்கே என தேடத் தொடங்கினர். இதையடுத்து சிவகாமியம்மாளை காணவில்லை. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது.
அந்த புகாரின் பேரில் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது மூன்றடைப்பு பகுதியில் உள்ள பாலத்தில் பாலன், தனது தாயை சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து கயிற்றால் கட்டி தனது ஊருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. போலீஸார் அவரை தடுத்து பார்த்தபோது, சிவகாமியம்மாள் உயிரிழந்திருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உணவு கொடுத்தபோது அவர் சாப்பிடவில்லை. அதனால் அவரை வீட்டுக்கு அழைத்துவந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தாயின் உடலை சைக்கிளில் கட்டி பாதுகாப்பாக எடுத்துச்சென்ற பாலன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
சிவகாமியம்மாள் உடலை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் எப்படி வெளியே சென்றார், உண்மையிலேயே அவர் உயிரிழந்த பிறகுதான், அவரது மகனால் தூக்கிச் செல்லப்பட்டாரா அல்லது மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால், அவர் வெளியேறினரா, அவர் உயிரிழந்தது யாருக்கும் எப்படி தெரியாமல் போனது, அங்கு சிசிடிவி காமிரா ஏதும் இல்லையா என பல கேள்விகளை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.