சென்னை:  சம்பா பருவத்தில் அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்  என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பருவமழை, சம்பா பருவ பயிர் இழப்பீடு, பயிர்காப்பீடு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து,  தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுதலைமை செயலகத்தில் மாண்புமிகு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 31.10.2023 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி, அர்னா, இ.ஆ. வேளாண்மைத் துறை ஆணையர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப.. வேளாண்மை கூடுதல் இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப. தலைமைப் பொறியாளர் (வே பொ.) திரு ஆர்.முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கீழ்க்கண்டவாறு டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.நவம்பர் 15-ம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின், குறுகிய கால நெற்பயிர் இரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51. அம்பை 16 போன்ற இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறுகியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும் பிங்க் பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டிேவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிலத்தடி நீரை (கிணறுகள். உறைக் கிணறுகள். ஆழ்துளை குழாய்கி கிணறுகள்) தேவைக்கேற்றவாறு. சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023 க்குள் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.