சென்னை: பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, கொலை, கொள்ளை, பிக்பாக்கெட் உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் புள்ளிங்கோக்கள் இனி தப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.
டிஜிட்டல் வளர்ச்சி ஒருபுறம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்க, மற்றொருபுறம் கிரைம் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக வீடுகள், மால்கள், பொதுஇடங்கள் அனைத்திலும் சிசிடிவி காமிரா பொருத்துவதும் அத்தியாவசி யமாகி வருகிறது. சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் மட்டுமே குற்ற வழக்குகள் துப்பு துலக்கப்பட்டன. இதனால் எப்போதும் போலீஸாருக்கு சவாலாகவே இருந்தது.
இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதாவது 2017ம் ஆண்டு ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் சென்னையில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் கொண்டு வரப்ட்டது. அதன்படி, தனியாா் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கேமராக்களை பொருத்தும் பணியை தீவிரப்படுத்தினாா்.
மூன்றாவது கண் திட்டத்துக்கு முன்பு வரை சில ஆயிரம் கேமராக்கள் மட்டும் இருந்த சென்னையில் இப்போது 50 மீட்டருக்கு ஒன்று வீதம் சுமாா் 2.80 லட்சம் கேமராக்கள் உள்ளன. இது காவல்துறையினருக்கு உதவியாக உள்ளது. கேமராக்களின் உதவியோடு குற்ற வழக்குகளில் போலீஸாா் எளிதாக துப்பு துலக்கி வருகின்றனர். சுமாா் 80சதவீத வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு கண்காணிப்பு கேமராக்களே உதவிபுரிவாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தற்போது மேலும் திறன்கொண்ட ஏஎன்பிஆா் கண்காணிப்பு காமிராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகர ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றதும், சென்னை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னல் அருகே அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையின் ஒருசில பகுதிகளில் ஏ.என்.பி.ஆர் (ANPR) எனப்படும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் தாமாகவே வாகனங்களின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.
இந்த ஏஎன்பிஆா் கேமராக்கள் வெறும் காட்சிகளை மட்டுமல்லாது ஒருவரது உணா்வுகளையும் அறியும் வசதி கொண்டது. குற்றச் சம்பவம் நிகழ்வதற்குரிய சூழல் ஓரிடத்தில் ஏற்பட்டால், அதை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.
இதைத் தவிா்த்து இந்த கேமராவில் ஒரு இடத்தில் எத்தனை போ உள்ளனா், பாதுகாப்புப் பகுதியில் வைக்கப்பட்ட பொருள் திருடப்பட்டால் எச்சரிப்பது, வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் காண்பது, குரல் மூலம் ஒருவரை கண்டறிவது, முகம் அடையாளம் மூலம் ஒருவரை கண்டறிவது, வெடி பொருளை கண்டறிந்து எச்சரிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
சாதாரண கேமராவில் ஒரு மனிதனின் முக அடையாளத்தை வைத்து மட்டுமே குற்றவாளியை அடையாளம் காண முடியும். ஆனால் இந்த கேமராவில் ஒருவரது நடவடிக்கை, உணா்வுகளை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை அடையாளம் கண்டு எச்சரிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதற்காகஅந்த கேமராவிலும், அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் சா்வரிலும் அதற்குரிய பிரத்யேகமான மென்பொருள் பொருத்தப்பட்டிருக்கும்.
நகா் முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் இத்தகைய கேமராக்களில் குற்றத் தொடா்புடைய மற்றும் வழக்கத்துக்கு மாறான காட்சிகளை தோவு செய்து, அதை மட்டும் கட்டுப்பாட்டு அறை திரையில் ஒளிபரப்பி, எச்சரிக்கை விடுக்கும்.
தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சென்னை காவல்துறைக்கு ஒதுக்கியுள்ள ரூ.150 கோடி நிா்பயா நிதியை, சென்னை பாதுகாப்புக்காக செலவிட திட்டமிட்டுள்ள மாநகர காவல்துறை, நுண்ணறிவு கேமராக்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேலும் பல இடங்களில் பொருத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறும் இடங்கள், பாலியல் தொந்தரவு சம்பவங்கள் ஏற்பட்ட இடங்கள், பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் கோயில்கள், கடற்கரைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை அடையாளம் கண்டு, அங்கு இக்கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இவற்றுக்கான கட்டுப்பாட்டு அறை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் புதிதாக ரூ.60 கோடியில் கட்டப்படும் கட்டடத்தில் இரு தளங்களில் அமைக்கப்படுகிறது. இந்த கேமராக்களை கையாளுவது தொடா்பாக கட்டுப்பாட்டு அறை காவலா்களுக்கு பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்படுகிறது.