மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள யுவராஜ் சிங், சிறப்பான வழியனுப்பு விழாவுக்கான தகுதி படைத்தவர் என்று புகழ்ந்துள்ளார் தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா.

கடந்த 2000ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கென்யாவிற்கு எதிராக அறிமுகமான யுவராஜ் சிங், ஜுன் 10ம் தேதி மும்பையில் ஓய்வை அறிவித்தார். மொத்தம் 17 ஆண்டுகாலம் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டின் டி-20 உலகக்கோப்பை மற்றும் 2011ம் ஆண்டின் ஐசிசி உலகக்கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றதில், இவரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் புகழ் மாலைகளை சூட்டி வருகின்றனர்.

“உங்களுக்கு கிடைத்ததை இழக்கும்வரை, அதைப்பற்றி நீங்கள் அறியவில்லை. என் அன்பைப் பெற்ற சகோதரரே, நீங்கள் உண்மையிலேயே சிறப்பான வழியனுப்பு விழாவிற்கு உகந்தவர்” என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ரோகித் ஷர்மா.

யுவராஜ் சிங், 17 சதங்கள் மற்றும் 71 அரை சதங்கள் ஆகியவற்றோடு, மொத்தம் 11,778 ரன்களை விளாசியுள்ளார். இவர் மொத்தம் 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி-20 போட்டிகள் ஆகியவற்றில் ஆடியுள்ளார். ஆனால், இவருக்கு ஓய்வு பெறுவதற்கு முந்தைய இறுதி ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஷேவாக் உள்ளிட்ட சில பிரபலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.