ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துவங்கியது.

அக்டோபர் 8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மொத்தம் 5 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இதற்காக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கடற்கரை காமராஜர் சாலை ஆகியவற்றில் போட்டி நடைபெறும் நாட்களில் நண்பகல் பகல் முதல் இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முதல் போட்டி சென்னையில் நாளை ஞாயிறன்று நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ. 1500 முதல் 10000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மட்டும் விற்பனையான இந்த டிக்கெட்டுகளை வாங்கிய சிலர் இதற்கு முன் சேப்பாக்கம் மைதான கவுன்டர் கியூவில் கால்கடுக்க நின்று டிக்கெட் வாங்கி அதை ப்ளாக்கில் விற்ற அந்தப் பகுதி நடைபாதை வாசிகளை விட அதிக விலைக்கு இணையதள வாசிகளிடம் தற்போது ப்ளாக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேவேளையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழைபெய்து வரும் நிலையில் நாளை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் போட்டி சிறிதுநேரம் தடைபட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் இது போட்டியின் முடிவை மாற்றும் வகையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.