டில்லி,

தர பிற்படுத்தப்பட்டோருக்கான  (OBC)  வருமான உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள உச்சவரம்பு 6 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கவும், வேலை வாய்ப்புகளைப் பெறவும், 27 சதவீத இடஒதுக்கீடு முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சான்றிதழ் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய  விலைவாசி நிலவரப்படி, 6 லட்சம் என்பது மிகக்குறைவு என்றும், இதன் காரணமாக ஓபிசி சலுகை பெற முடியவில்லை என்று நடுத்தர  மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதையடுத்து, இதர பிற்படுத்தப்பட்டோர்கள் (ஓபிசி)  இடஒதுக்கீடு சலுகையை பெறும் வகையில், பெற்றோர்களின் வருமான உச்சவரம்பை ஆண்டிற்கு 6 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை துணை வகைப்படுத்தவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.