ஹரியானா சட்டசபைக்குள் நுழையக் கூடாது என்று “கௌ ரட்சகர்கள்” (பசு பாதுகாவலர்கள்) எச்சரித்ததாக ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடுமாறு ஹரியானா முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதேனும் நேர்ந்தால் மாநில அரசு தான் பொறுப்பு என்று கூறினார்.

பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் ஆயுதம் ஏந்தி நாசவேலையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று மம்மன் கான் எம்.எல்.ஏ சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து “கௌ ரக்ஷர்கள்” என்ற பெயரில் மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியானது.

இந்த நிலையில் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள கான், “மாநிலத்தில் எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானியர்களின் நிலையை நீங்களே எண்ணிப் பாருங்கள். நாசவேலை மற்றும் ஆயுதத்தை கையில் ஏந்தும் அதிகாரம் என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது ?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நான் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன், எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் நடந்தால், அரசுதான் பொறுப்பாகும்”, என்றார்.

இதுகுறித்து நூஹ் நகர துணை கமிஷனர் அஜய் குமார் கூறியதாவது “நாங்கள் இரு சமூகத்தினரிடமும் பேசியுள்ளோம், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வோம்” என்று கூறினார்.