ஆமதாபாத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடக்கம்

Must read

ஆமதாபாத்:

கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு பணிகளை ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அதை வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தொடங்கி உள்ளன. இதற்காக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் முதியவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.

அந்தவகையில் குஜராத் அரசும் இந்த பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. அங்கு 3.90 லட்சம் சுகாதார பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக மாநில அரசு சமீபத்தில் கூறியிருந்தது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு பணிகளை ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. தடுப்பூசிக்காக இதுவரை பதிவு செய்யாத சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் போன்ற முன்னுரிமைதாரர்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் முன்பதிவு செய்ய உள்ளனர்.

மேலும் இணையதள முகவரி ஒன்றை அறிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், இதில் முன்னுரிமைதாரர்கள் நேரடியாக பதிவு செய்ய அழைப்பு விடுத்து உள்ளது. இதைத்தவிர நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

More articles

Latest article