எக்ஸ்-ரே-க்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் சோதனை மேற்கொள்வதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் கோவிட் தொற்று குறித்து துல்லியமாக கண்டறிய முடியும் என்று ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஸ்காட்லாந்த் பல்கலைக்கழகத்தைச் (UWS) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள சோதனைத் தளத்தின் மூலம் PCR சோதனையை விட மிக குறைந்த நேரத்தில் கொரோனா தொற்று கண்டறிய முடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோவிட் நோயாளிகள், ஆரோக்கியமான நபர்கள் மற்றும் நிமோனியா வைரஸ் உள்ளவர்கள் என 3000 பேரின் எக்ஸ்-ரே தரவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒப்பீடு செய்து பெறப்பட்ட முடிவுகள் மிகவும் துல்லியமாக இருந்ததாக கூறும் இவர்கள், இந்த சோதனை குறிப்பாக PCR சோதனைகள் உடனடியாக கிடைக்காத இடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரும் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இது சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஆழமான நரம்பு வலையமைப்பு போன்ற AI செயல்முறையைப் பயன்படுத்துகிறது, இது பொதுவாக காட்சிப் படங்களை பகுப்பாய்வு செய்வதற்கும், நோயறிதலைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறை ஆகும்.

சோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில் 98 சதவீதத்திற்கும் அதிகமான அளவு துல்லியமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக சென்சார்ஸ் மருத்துவ இதழில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“வெவ்வேறு எக்ஸ்ரே இயந்திரங்களில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படங்களின் பெரிய தரவுத்தளத்தை இணைத்து ஆய்வை விரிவுபடுத்துவதன் மூலம் இதனை மருத்துவமனைகளில் பயன்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கோவிட் சோதனைகளை மேற்கொள்ள முடியாத நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்றை விரைவாக பரிசோதிக்க பெரிதும் உதவும்” என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய UWS-ன் பேராசிரியர் நயீம் ரம்ஜான் கூறியுள்ளார்.