சென்னை: கொரோனா கால சிறப்பு ரயில்களுக்கு இந்தியன் ரயில்வே டாடா சொல்லியுள்ளது. இனிமேல் பழைய நடைமுறைப்படி பழைய எண்களுடன் ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், பின்னர் சிறப்பு ரயில்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தியன் ரயில்வே இயக்கி வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா கால சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும், இனிமேல் பழைய நடைமுறைப்படி, பழைய எண்களில் சாதாரண பயணிகள் ரயில், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்து உள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக சாதாரண ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டு, பயணிகளின் வசதிக்கா கசிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்கியது. சிறப்பு ரயில்களின் கட்டணம் சாதாரண ரயிலை விட அதிகம். மேலும் பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப் பட்டதால் அதில் பயணம் செய்வதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. மற்றும், சாதாரண ரயில்களை விட, 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருந்தால், ரயில்வேமீது மக்களுக்கு அதிருப்தியையே உருவாக்கியது.
பின்னர் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை படிப்படியாக குறைத்து வந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சிறப்பு ரயில்களின் இயக்கம் விரைவில் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வும் உறுதிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தொடங்கின.
ரயில்வே அமைச்சரின் கூற்றுப்படி, தற்போது 95 சதவீத மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியுள்ளன. இந்த ரயில்களில் சுமார் 25 சதவீதம் சிறப்பு ரயில்களாக இயங்குகின்றன. இனிமேல் இதையும் நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் மண்டல ரயில் நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, கொரோனா காலத்தை ஒட்டி அதிக கட்டணத்துடன் இயக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு ரயில்களும் விரைவில் விடை பெறுகின்றன. இனி பழைய கட்டணத்தில் பழைய எண்களுடன் முன்பதிவில்லா பெட்டிகளுடன் அனைத்து பாசஞ்சர், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
அதே வேளையில், “சிறப்பு வழக்கில் அனுமதிக்கப்பட்ட தளர்வுகளைத் தவிர, இரண்டாம் வகுப்பு ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டதாகத் தொடரும்” என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.