சேலம்: தளர்வு மற்றும் பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சேலம் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேட்டூரில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் குறைந்துள்ளது.  பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் கூடுதல் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கையால் தற்போது 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. அதேசமயம், 10 மாவட்டங்களில் தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. பாதிப்பு படிப்படியாக குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. லேசான அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். தொற்று பாதித்த அறிகுறி தெரிந்தவுடன் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்.

மேலும், கொரோனா மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. கடந்த மே மாதம் ஆக்சிஜன் தட்டுபாடு பெரும் சவாலாக இருந்த நிலையில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணத்தை வசூலித்த தனியார் மருத்துவமனைகள் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.