டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி 21 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். காணொலிக்காட்சி மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது.

கேரளா, கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனாவால் ஒருவர்கூட இறக்கக்கூடாது என்று தான் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் ஏற்படும் உயிரிழப்புகள் மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றன. ஆனாலும், பிற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனாவால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

அதே போன்று சிகிச்சை முடிந்து, குணமந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 50 சதவீதத்துக்கு மேலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.  பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவதையும், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் வாழ்வின் ஒரு அங்கமாக கடைபிடிக்க வேண்டும்.

கிருமிநாசினிகளை கொண்டு கைகளை கழுவும் பழக்கத்தையும் வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள போக்குவரத்து வசதிகள் உதவியால், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்  சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் விவசாயம், சிறு, குறு, தொழில்கள், மீன்வளத் துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தற்போது பாதிப்பில் உள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். அதற்கான நல்ல அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டன என்று கூறினார்.