டெல்லி: கொரோனா ஊரடங்கால் தனியார் பேருந்து, சுற்றுலா டாக்சி தொழிலில் ஈடுபட்டுள்ள 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 5ம் கட்டமாக ஊரடங்கு  அமலில் உள்ளது.

அதனால், பள்ளி, கல்லூரிகள், ஆலயங்கள் மூடப்பட்டன. தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா டாக்சிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

இதுபற்றி இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான கூட்டமைப்பான பிஓசிஐ தலைவர் பிரசன்னா பட்வார்தான் கூறி உள்ளதாவது: 15 லட்சம் அளவிற்கு தனியார் பேருந்துகள், மேக்சி கேப்கள் மற்றும் 11 லட்சம் சுற்றுலா டாக்சிகள் எங்களுடைய கூட்டமைப்பு சார்பில் இயங்கி வந்தன.

இதன் மூலம் 1 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா டாக்சி தொழிலில் ஈடுபட்டு வந்த 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

எங்களது கூட்டமைப்பினருக்கு அரசின் ஆதரவு தேவை. எங்களில் பலர் இந்த தொழிலை விட்டு விட்டு செல்ல கூடிய சூழலில் உள்ளனர். ஆகையால் வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். வாங்கிய கடன்களுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.