டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 பேருக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் பலருக்கு மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரத்த நாளங்களில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து விடுகிறது. ரத்தம் உறைவதால் உடம்பில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மேலும் சிலருக்கு  உள் காது  பாதிக்கப்பட்டு  செவித்திறன் குறைவாகதும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போது அது  உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சப்தம் கேட்பதாகக்கூறி டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனை புள்ளி விபரங்களின் படி கடந்த 2 மாதங்களில் காது கேளாமைக் கோளாறினால் 15 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருமே கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின்  காதுகளில் வலி அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும்,தாமதமானால் செவித்திறன் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம்  வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.