சென்னை: கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, சென்னையில் அமைக்கப்பட்ட மாலை காய்ச்சல் முகாம்கள் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன.

அக்டோபர் 10 முதல் தினமும் 1,000 க்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக அலுவலகத்தில்  வருபவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 16 அன்று மட்டும் 45 காய்ச்சல் முகாம்களில் மொத்தம் 2,138 பேர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியானது சமீபத்தில் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் காய்ச்சல் முகாம்களை ஏற்பாடு செய்யத் தொடங்கியது.
காலை முகாம்களுடன் ஒப்பிடும்போது மாலை முகாம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வரவேற்பு நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு முயற்சி என்றும் வரவேற்பை பொறுத்து முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
மழைக்காலம் காரணமாக, எத்தனை பேர் வருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் பரிசோதனைகள் செய்ய அல்லது மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்கள் வருவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
அக்டோபர் 10 முதல் 16 வரை 223 மாலை காய்ச்சல் முகாம்களில் மொத்தம் 8,642 பேர் கலந்து கொண்டுள்ளனர். 118 பேரிடம் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளன. இது தவிர, தினசரி சராசரியாக 20,000 பேர் காலையில் முகாம்களுக்கு வருகிறார்கள்.
இதுவரை 60,919 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, 30,76,220 பேர் வருகை தந்துள்ளனர். இது சென்னையின் மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.