சென்னை:

கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கவுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவேக்சினின் மூன்றாம் கட்ட சோதனைகள் விரைவில் தொடங்கப் போவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை சேர்ந்த மருத்துவமனை ஒன்று தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கோவாக்சின் சோதனை செய்யப்படும் இந்தியாவின் 12 நிறுவனங்களில் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய மருத்துவ சோதனை கோவேக்சின் பரிசோதனைக்காக பல சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சின் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவ நிறுவனமான பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் உடன் இணைந்து தயாரித்த மருந்தாகும்.

இதைப்பற்றி எஸ்ஆர்எம் மருத்துவமனையின் மருத்துவர் சத்யஜித் மஹோபாட்ரா தெரிவித்துள்ளதாவது:
கொரோனா தடுப்பு மருந்தான கோவேசினின் மூன்றாம் கட்ட சோதனைக்காக அனைவரும் தயாராக இருக்கிறோம், அனைத்து ஒப்புதலையும் பெற்றவுடன் 15 நாட்களில் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதல் இரண்டு கட்ட சோதனைக்கான தரவுகளின் அடிப்படையில் மூன்றாம் கட்ட சோதனையில் கிட்டத்தட்ட 40,000 தன்னார்வலர்கள் இந்த சோதனைக்குட்படுத்தப் படுவார்கள் என்றும் எஸ்ஆர்எம், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 1,500 தன்னார்வலர்களை தேடி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக மருந்தை விலங்குகள் மீது செலுத்தும் சோதனையில் கோவேக்சின் வெற்றி பெற்றுள்ளதாகவும், பஞ்சாபில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் கோவேக்சினுக்கான மூன்றாம் கட்ட சோதனை தொடங்கவிருப்பதாகவும் பாரத் பயோடெக் செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.