டெல்லி: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், கொரோனா தடுப்பூசிகளைப் பொறுத்தவரை அவை ஒவ்வொரு வேற்றுருவுக்கும் ஒவ்வொரு மாதிரியாகச் செயல்படும். தற்போது நடத்திய ஆய்வுகள் முடிவில் ஆல்ஃபா, காமா, பீட்டா, டெல்டா போன்ற வேற்றுரு வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. டெல்டா ப்ளஸ் வைரஸை எடுத்துக்கொண்டால், தற்போது டெல்டா பிளஸ் 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வைரஸ்களுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 10 நாட்களில் முடிவு வெளியாகும் என்றார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியை கடந்துள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.