சென்னை: சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது. அதைத்தொடர்ந்து இன்று கோவாக்சின் 2வது தடுப்பூசி இன்று போடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு தற்போது 3,500க்கும் கீழே வந்துள்ளது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசிக்கு கடும்  தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், அவ்வப்போது தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டும், தடுப்பூசிகள் கிடைத்ததும் மீண்டும் திறக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின்  இன்று  மொத்தமுள்ள  45 கொரோனா தடுப்பூசி மையம், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில்  கோவாக்சின் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு  மையத்திலும  ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 2வது டோஸ் மட்டுமே இன்று போடப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.