ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது வீடியோக்கள் மூலம் சம்பாதித்த முழு வருவாயையும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தில் சினிமா தயாரிப்பதாக 2024 மார்ச் 4ம் தேதி சவுக்கு மீடியா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ₹1 கோடி நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்தது.

யூடியூபர் சங்கரின் நோக்கம் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புவதாக உள்ளது என்று வாதிட்ட வழக்கறிஞர் சவுக்கு மீடியா மற்றும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து லைகா நிறுவனம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்கான முகாந்திரம் இருப்பதாக உணர்ந்த நீதிபதி என். சதீஷ் குமார் இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல் 12ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், லைகா நிறுவனம் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட தடை விதித்துள்ள நீதிபதி லைகா நிறுவனம் தொடர்பாக சவுக்கு சங்கர் தெரிவித்த கருத்து அடங்கிய வீடியோ மூலம் சம்பாதித்த பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.