சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த டிசம்பர் 1 ம் தேதி கைது செய்யப்பட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சமாக வாங்கிய தொகையில் உயர் அதிகாரிகளுக்கு பங்கு தரப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை அளித்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து, அங்கித் திவாரி கைது பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்து மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.