சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (6ந்தேதி) அன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அனைத்தும், சுமார் 75 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியை சுற்றி 24 மணி நேர கண்காணிப்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் 16வது சட்டமன்றத்தை கட்டமைப்பதற்கான, சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி 234 தொகுதிகளிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 1 லட்சத்து 29 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தேர்தலில், சராசரியாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள கல்லூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, சீல் வைக்கப்பட்டு காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட ஊளுளுனு.
சென்னைக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் நடைபெற்று வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஆர்.கே.நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை மெரினா கடற்கரை, ஐஜி ஆபிஸ் அலுவலகம் அருகே அமைந்துள்ள ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன.
விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரமாக வைக்கங்பபட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஆலோசனையின் பேரில், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஒவ்வொரு மையத்திலும் 500 போலீசார் வீதம் 1,500 போலீசார் 3 ‘ஷிப்ட்’ முறையில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர், போலீஸ் சிறப்பு படையினர், சட்டம்-ஒழுங்கு போலீசார் என சுமார் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.