சென்னை: நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகளை காண மக்கள் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள். 5 மாநிலங்களிலும் இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது உறுதியாகி விடும்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் பல கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், மே 2ந்தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாகப் பின்பற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் மேற்பார்வையில் வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளன. காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பிறகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளும் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை பிடிக்க திமுகவும், தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும் கடுமையாக போராடின.
சென்னையில் 3 மையங்கள் உள்பட 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் முகவர்கள் மட்டும் தனிவாகனத்தில் வாக்குச்சாவடிக்கு அழைத்துசெல்லபட்டனர். முன்னதாக தேர்தல் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கு நேற்றைய தினத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரியில், முன்னாள் முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் ஒரு அணியும், திமுக காங்கிரஸ் கூட்டணி மற்றொரு புறமும் போட்டியிட்டுள்ளன. ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று மதியம் தெரிந்து விடும்.
கேரளாவில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அங்கு ஆட்சி அமைப்பது யார் என்பது இன்று பிற்பகல் உறுதியாகும்.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக பம்பரமாக சுழன்று பணியாற்றியது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் யாருக்கு வழங்கப்போகிறார்கள் என்பது இன்று மாலை தெரிய வரும்
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அங்கும் இன்று மதியம் வெற்றிபெறப்போவது யார் என்பது குறித்து தெரிந்து வரும்.
வாக்கு எண்ணிக்கையை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.