சேலம்: ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவியை சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இது திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

100நாள் வேலை திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் கலைச்செல்வி சிவக்குமார். இவர் திமுகவை சேர்ந்தவர்.  கடந்த ஒரு ஆண்டுகளாக,  ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பொதுமக்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல், கள்ளக்கணக்கு காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும்,  ஆட்டுக்கொட்டகை அமைப்பதில் முறைகேடு செய்திருப்பதாகவும் பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவி மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். அதில்,   முறைகேடு செய்திருப்பது உறுதியானது. இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.