செசன்னை: லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய சென்னை தெற்கு மண்டல மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் மாணிக்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை சி.பி.ஐ – வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல மத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி ஆணையராகப் பணியாற்றி வந்த பி. மாணிக்கவேல், லஞ்சப் புகாரில் சிக்கி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2004-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர் மீது, ஜி.எஸ்.டி செலுத்துவோரிடம் சட்டவிரோதமாகப் பணம் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் தி.நகர் உள்பட 11 மண்டலங்களை கவனித்துவந்தார்.
வரி வசூல் அதிகம் நடைபெறும், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 11 பிரிவுகளை உள்ளடக்கிய சென்னை தெற்கு மண்டலம் முழுவதையும் கவனித்து வந்தார். . இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பில் இருந்த உயரதிகாரியே ஊழல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அரசுத் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்மீது தொடர் புகார்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு சென்ற நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்து, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் பிப்ரவரி 7-ஆம் தேதி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
அந்த உத்தரவின்படி, மாணிக்கவேல் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மேல் உத்தரவு வரும் வரை அவர் தனது தலைமையகத்தை விட்டு அனுமதியின்றி வெளியேறக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகத் துறை ரீதியான விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும், புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் முதன்மை ஊழல் தடுப்பு அதிகாரி, இந்த வழக்கை சி.பி.ஐ (CBI) விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளார். இதனால் இந்த ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.