முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் வழக்குகள் வாபஸ்…! அப்பாவு

Must read

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் மீதான ஊழல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. வழக்கை தொடர்ந்து, தற்போதைய சபாநாயகர் அப்பாவு வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியதைத்தொடர்ந்து, அவர்கள்மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தெருவிளக்குகளில் எல்இடி பொருத்தவது தொடர்பாக அப்போதைய திமுக எம்எல்ஏ இப்போதைய சபாநாயகர் அப்பாவு அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி மீது புகார் அளித்திருந்தார். அதன்படி  23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதுபோல, கடந்த ஆண்டு (2020) கொரோனா காலத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டது.  மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் மீதான விசாரணைக்கு,. ஆளுநர் அனுமதி வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மூன்று வழக்குகளும் இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதித்து மூன்று வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More articles

Latest article