வாஷிங்டன்: மனிதர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை முற்றிலும் ஒழிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. உலகம் முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் மருந்துகள் தயாரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை கொரோனா தொற்று குறித்து அறிய, பாதிக்கப்பட்டவர்களின்  ரத்த மாதிரிகள் பயன்படுத்துவதற்கு பதிலாக, அவர்களது மூக்குச் சளியை எடுத்து, அதன் மூலம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் அல்லது, மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
அதுபோல எச்சில் வழியாக கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் கொரோனா கிருமி, மனிதர்கள் பேசும்போது, தும்மும்போது, இருமும்போது தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இதனால்தான், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை  செய்ய முடியுமா என்பது குறித்து இதுவரை எந்த வித தகவலும் வெளியாகவில்லை. சமீபத்தில் கொரோனா தொற்று காற்றின் மூலமாகவும் பரவி வருவதாகவும் ஆய்வுகள் கூறியுள்ளன.
இந்த நிலையில், தற்போது,  அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம், ஒருவரின் எச்சில் மூலம் கொரோனா சோதனை மேற்கொள்ள முடியும் என்று அறிவித்துஉள்ளது.
இதற்காக சலைவா டைரக்ட் எனப்படும் இந்த புதிய வகை சோதனை முறையை தெரிவித்து உள்ளது. அதன்படி, ஒரு மைக்ரோ லிட்டர் எச்சிலில் 6 முதல் 12 வைரஸ்கள் இருந்தால் கூட, அவர்களின் தொற்று பாதிப்பு குறித்து  கண்டறிய முடியும். இது தற்போதைய தொண்டை திரவ சோதனையை விட 93 சதவிகிதம்  துல்லியத்தன்மை  கொண்டது என்று தெரிவித்து உள்ளது. இந்த சோதனை மூலம், எளிமையாகவும், விரைவாகவும் கொரோனா சோதனை செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.