கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நீரழிவு மாத்திரைக்கு தட்டுப்பாடு வரும் ஆபத்து உள்ளதாக பிரபல மருத்துவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர்  Dr.ஃபரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் சீனாவை பாதிப்பதால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் மருத்துவம் சார்ந்த பாதிப்பு யாதெனில்  கூடிய விரைவில் முக்கியமான நீரிழிவு மாத்திரையான மெட்பார்மின்  ஆண்ட்டிபயாடிக்குகள் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் போன்றவை தேவைக்கு இல்லாத நிலை உருவாகலாம்.

காரணம்

மேற்சொன்ன மருந்துகள் அனைத்துக்குமான மூலப்பொருளுக்கு இந்திய பார்மா கம்பெனிகள் சீனாவையே பெரும்பகுதி சார்ந்து இருப்பது தான்.

சீனாவில் இருந்து நொதித்தலை மூலமாகக் கொண்டு இயங்கும் மருந்து மூலக்கூறுகளை( fermentation based active pharmaceutical Ingredients) இந்திய பார்மா கம்பெனிகள் இறக்குமதி செய்கின்றன.

தற்போது சீனாவில் கொரோனா அச்சத்தால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி நடுங்குகின்றனர் . இதனால் இந்த மூலப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த பத்து நாட்களிலேயே, இந்த மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக விலை 25 முதல் 30 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.

நமது மருந்து கம்பெனிகளிடம் இரண்டு மாதத்திற்கான ஸ்டாக் மட்டுமே இருக்கிறது.

மெட்பார்மின் மாத்திரைக்கான மூலப்பொருளுக்கு முழுமையாக நாம் சீனாவை தான் நம்பியிருக்கிறோம்.

இதைத்தொடர்ந்து நமது பார்மா கம்பெனிகள் அரசாங்கத்திடம் “மாசுக்கட்டுப்பாடு குறித்த விஷயங்களில் கொஞ்சம் இலகிய போக்கை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அரசும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் இந்த குறுகிய கால இடைவெளியில் இந்திய பார்மா கம்பெனிகள் இந்த மாத்திரைகளின் மூலப்பொருட்களை தயாரிப்பதில் கடும் சவாலை சந்திக்க இருக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் உலகம் முழுவதும் மாஸ்க் மற்றும் சுய பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது

பொறுத்திருப்போம்
விழித்திருப்போம்

உலகம் ஒரு சிறு கிராமம்
பக்கத்து வீட்டு குடிசை பற்றி எரியும் போது
நாம் மட்டும் நிம்மதியாய்
எப்படி உறங்க முடியும் ..?

தொடர்ந்திருப்போம்

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை