சென்னை

திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரிச் சோதனை முடிவடைந்துள்ளது.

கடந்த 3 நாட்களாகத் திரைப்பட  ஃபைனான்சியர் அன்புச் செழியனின் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் அமைந்துள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை இட்டு வந்தனர்.   அதே வேளையில் சென்னையில் ஏஜிஎஸ் திரையரங்கின் அலுவலகங்கள், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் விட்டு ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

அத்துடன் மதுரையில் அன்புச் செழியனின் நண்பரும் நகைக்கடை அதிபருமான சரவணன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.  அன்புச் செழியனின் தியாகராயநகர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி ரூபாய் ரொக்கமாகப் பல மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்த சோதனையில் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.   இது தொடர்பாக 2 பைகள் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.