ஜெனிவா:
கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சத்தை தாண்டி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,716,388 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 190,499 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 6,572 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 745,343 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி 56,678 பேர் உடல் நிலை மோசமடைந்து உலகம் முழுவதும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,721,868 பேர் நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,325 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,845 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் நேற்று மட்டும் 464 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,549 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டில் நேற்று மட்டும் 440 பேர் இறந்த நிலையில் இதுவரை மொத்தமாக 22,157 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் நேற்று மட்டும் 516 பேர் உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 21,856 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் மட்டும் 638 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,738 ஆக உயர்ந்துள்ளது.